Friday, September 21, 2012

ப்ரிய சிநேகிதா .....

 
 
ப்ரிய சிநேகிதா !

அன்று உன்மதி முகத்தில்
வீழ்ந்து தெறிக்கும் புன்னகைகளை
களவாய்ப் பொறுக்கி பதித்து கொண்டேன் - என்
இதழோரங்களில்

எத்தனையோ எதிர்பார்ப்பு - நம்
இம்ஷைகளில்
என்னுள் வீழ்ந்து தவிக்கும்
தனிமையிலுன் விம்பம் மட்டுமே
தரித்துச் செல்கின்றதென்
மனவெளியில்

என் வீட்டு ஜன்னலோரமாய்
அடிக்கடி வீழ்ந்து கிடக்கும்
நம் பால்ய பருவத்து அசைவுகளில்
சாம்ராஜிய காதலுணர்வுகளை
சடுதியாய் சேகரித்துக் கொண்டேன்
நாளைய நம் வரலாற்றிற்காக


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா உன்னில்
சூழும் அந்த கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றது என் ஆத்மாவும்


தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமென் மேனிதாங்குமோ
பிரிவின்அகோரச் சீண்டலை
அடிக்கடி உள்வாங்கும் போது..
கண்ணீர்த்துளிகளாய் இறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே..

நம் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன - நான்
அறியாமலே

கலைந்தோடும் மேகங்களில் - நான்
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை
துவம்ஷம் செய்யும் காற்றை- நான்
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
என்னுள் கண்டு

பனிப் பாறை தன்னுள் உறைந்து கிடக்கும்
என் காதல் ஞாபகங்களை
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுகிறது
என் பெருமூச்சின் வெம்மை கண்டு

சிலுவையில் அறையப்பட்ட என் காதலின்
செந்நீர்த்துளிகளால்
சிதையும் என் இருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - என்
உயிரனுகளில் இன்பம் மீள சேரவே

காத்திருகின்றேன்
என் காதல் யாகத்தின் வலிமை
வேரூன்றும் உன் காலடியோரம்- அது
உன்னுள் எட்டிப் பார்க்கும்
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும்

என் நெஞ்சக் கூட்டில்
மோதியெழும் கடலலைச் சங்கமம் இனி
சந்தத்துடன் இசையாகு மோர் நாள்- என்
காதல் சாம் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய்

காத்திருகின்றேன் அதே காதலுடன் ..

உன்னை சேராத கடிதம்

 
உன் மௌனங்களை தேடியே
மரணித்து விழுகிறது எண்ண திவலைகள்
உன் எச்சங்கள் எல்லாம்
மிச்சமாய் நின்று
என் விரதத்தை மிரட்டுகின்றது

நாசி துவரதுள் புகும்
உன் நினைவு சுமந்த
தென்றல் காற்றும்
ஊசியாய் உள் புகுந்து
என் சுவாசப் பையை
சல்லடைகளாய் துளைத்து செல்கிறது

இறுக்கி பிடிக்கும் இதய நரம்புகளும்
தளர்த்தி தவிக்கும் உடலின் அசைவுகளும்
உறைந்து கிடக்கும் நினைவு பாளங்களும்
விடுதலைக்காய் வெம்பி தவிக்கும்
விசித்திரமான உணர்வை சுமந்து
வெளி வரும் நீளமான மூச்சு முன்டியடிப்பும்
உன் இல்லாமையின் நிஜத்தை
செதுக்கி செல்கின்றது ..

என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...