Wednesday, October 16, 2013

நீர்க்குமிழி வாழ்க்கை




ஒவ்வொரு நிமிடத்தையும்
உனக்கானதாக
ஆக்கிவிடுகிறது உன் நினைவுகள் ...
உன்னால் உதிர்க்கப் படும் புன்னகைகள்
என் உதட்டில் மிச்சம் வைக்கிறது
அதன் எச்சங்களை ..
உன்னால் எழுப்பப்படும் கேள்விகள்
ஓவொன்றும்
என் சேலையின் மாராப்பில்
சிக்கி திமிறுகிறது
சில நிமிட விடுதலைகள் வேண்டி ..

சந்தேகங்களில் சடுதியாக
புகுந்துவிடும் சிந்தனை சிப்பிக்குள்
ஒரு முத்தென உருவாகிறது
உன் மீதான என் அன்பு ...
காலம் காலமாய்
உறைந்துவிட்ட
உறை நிலை அன்பை
செதுக்கி சிற்பம் ஆக்குவதில்
தீவிரமாய் முயல்கிறது
வார்த்தை உளி ...

எழில் குழையும்
குளத்தருகில்
குழல் தளர கொலுவிருந்து
நிழல் படரும்
நினைவுச் சுகம் புணர்ந்து
கருமணி விழியதனை
மடல் படரும் கணப் பொழுதில்
மொட்டொன்று சட்டென்று உதிர்ந்து
நீராடி நிமிர்கையில்
தெறித்த நீர்த்திவலைகள்
எழுதிச் சென்றது
காதல் ஓர் நீர்க்குமிழி வாழ்க்கையென.

கண்ணீர் இல்லாமல்



என் அனைத்திலும்
அடங்கிவிட்ட உன்னுள்
ஆத்மாவாகிவிட்ட என்
சுயங்களை
சுண்டி இழுக்கும்
நினைவுக் கரங்களின் பிடிகளில்
குழையும்
உன் ஸ்பரிச ரேகைகளின்
உஸ்னம்
உன் புன்னகை கீற்றுக்களால்
குளிர்ந்து விடுகிறது இப்பொழுதெல்லாம்

அடிக்கடி
என் உணர்வலைகளை
உருவகப் படுத்தி பார்க்கின்றேன்
அதில் உருவாகும் நீ
ஏனோ எனக்கு வலியை கொடுப்பதில்லை
மெலிதான உன் புன்னகையில்
மௌனித்துவிடும்
முணு முணுப்புகள்
முத்துக்களை பூக்க வைக்கிறது
முரட்டுத் தனமான
உதடுகளில் .

கடந்து சொல்லும் தென்றல்
ஏனோ கனல் அள்ளி தெளிப்பதில்லை
காதில் கலகலத்து சிரிக்கிறது
உன் சிரிப்புகளை
சிறிது களவாடி இருப்பதனால் ..

இரவினை உருக்கும்
வெள்ளி நிலவின்
ஒளிக்கீற்றும்
ஒன்றும் செய்வதில்லை
உன் முகம் கொண்டு
எனை பார்ப்பதனால் ...


ஒன்று மட்டும் சொல்லிவிட்டு செல்
உன் தேவை எனக்கு இல்லையா
இல்லை
உன்னைப் போல் ஒரு நிழல்
தீண்ட எனக்கு சம்மதமா ?
ஏனெனில்
உன் காந்தப் பார்வையை
தொலைத்த கணம் முதல்
நேற்றுவரை
கலங்கி தவித்த கண்கள்
இப்பொழுதெல்லாம்
முன்னைப்போல்
கண்ணீரைத் தருவதில்லை ..